ரிமோட்டில் மேய ஆரம்பித்தால் ஏதாவது ஒரு சேனலில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்! 'திரும்ப திரும்ப பார்த்து பார்த்து...' -குணாலும், மோனலும் கொஞ்சி குலவும் அந்த பாடல் முரளிகிருஷ்ணா இயக்கத்தில் பரணி இசையமைத்தது.
மறுபடியும் படம் எடுக்க வந்திருக்கும் முரளிகிருஷ்ணா இந்த முறை பரணியை விட்டு விட்டு யுகேந்திரனோடு கை கோர்த்திருக்கிறார். என் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆனால், யுகேந்திரன் என்னை கடந்த ஆறு மாதங்களாக விரட்டி இந்த வாய்ப்பை வாங்கிவிட்டார் என்கிறார் முரளி. ஐந்து பாடல்களை தேர்வு செய்ய நூற்றுக்கணக்கான ட்யூன்களை போட்டுக் காண்பித்தாராம் யுகேந்திரன். இதற்காகவே 3 மாதம் செலவிட்டிருக்கிறார்கள். பாடல் விஷயத்தில் இப்படி என்றால், கதை விஷயத்திலும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.
இல்லையென்றால் மணிரத்னம் மனைவியிடம் நல்ல கதை என்று சர்டிபிகேட் வாங்க முடியுமா? கதையை கேட்ட சுஹாசினி உடனே நடிக்க சம்மதித்ததோடு நானும் நிறைய படங்களில் நடிச்சிருக்கேன். ஆனால் எனக்கு இது மிகவும் வித்யாசமான படமாக இருக்கும் என்றாராம். தீபாசாரி என்ற மும்பை நடிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வழக்கமாக மும்பை நடிகைகள் என்றால், படம் முடிவதற்குள் நம்மை பாடாய் படுத்திவிடுவார்கள். ஆனால், தீபாசாரி அப்படியல்ல. டவுன் டு எர்த் என்கிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா. சன் மியூசிக் சேனலில் காம்பியராக இருக்கும் அரவிந்த் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.
பலப்பரீட்சை வைத்தாலும் ஜெயிப்பார்கள் போலிருக்கிறது.
-ஆர்.எஸ்.அந்தணன் |