பெருமாள் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல்வர் கலைஞர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நமீதாவும், மீனாட்சியும் நடித்திருக்கிறார்கள்.
முதல்வரின் பேரனும், மு.க.முத்துவின் மகனுமாகிய அறிவுநிதி, 'காதல் வைபோகமே' என்ற பாடலை பாடியிருக்கிறார். சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலின் ரீமிக்ஸ் இது. திரையுலக பிரபலங்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட விழாவில் ஆச்சர்யம் என்னவென்றால், நமீதா புடவை கட்டி வந்ததுதான்.
முதல்வர் கலந்து கொள்ளும் விழா என்ற நாகரீகம் கூட இல்லாமல், குட்டி பாவாடையோடு வந்து எல்லாரையும் தர்மசங்கடப்படுத்திய ஸ்ரேயா, ரஜினி, ஷங்கர் ஆகியோரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அந்த சம்பவத்திற்கு பின் இதுபோன்ற முக்கிய விழாக்களில் கலந்து கொள்வதையே தவிர்த்து வந்தார் ஸ்ரேயா. இந்த பிரச்சனை தொடர்பாக சட்டசபையிலேயே பேச்சு எழுந்தது. அப்போது நமீதாவின் ஆடை விஷயங்கள் பற்றியும் அங்கு விவாதிக்கப்பட்டது. ஆனாலும், தனது துணிக் கொள்கையில் 'துணி'ச்சலாகவே இருந்தார் நமீதா! இதுபற்றி கேள்வி கேட்ட நிருபர்களிடம் கூட, எனக்கு இதுதான் காற்றோட்டமாக இருக்கிறது என்று ஓப்பனாகவே பதில் சொன்னார் அவர்.
இந்த நிலையில் பெருமாள் பட விழாவுக்கு நமீதா எப்படி வருவார் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனாலும், முதல்வர் கலந்து கொள்ளும் விழாவுக்கு வருவதால், கண்ணியமாக ஆடை அணிந்து வர வேண்டும் என்று இயக்குனர் சுந்தர்சி கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் புடவை கட்டி வந்திருந்தார் நமீதா. அவரது இந்த தோற்றம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
-ஆர்.எஸ். |