சேவல் படத்திற்காக காரைக்குடியில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு ஒரு போன். எடுத்தால், எதிர்முனையில் ரஜினி. 'அண்ணே, வணக்கம்ணே' என்ற வடிவேலுவிடம் எடுத்த எடுப்பிலேயே 'மன்னிச்சுடுங்க' என்றால் எப்படியிருக்கும்? ஒன்றும் புரியாமல் அதிர்ந்தவரிடம், 'இந்த படத்தில் உங்களோட பங்கு அதிகம். நீங்க கொடுத்த ஒத்துழைப்பும் அதிகம். அப்படியிருக்கும்போது விளம்பரங்களில் உங்க படத்தை போடாம என் படத்தை மட்டும் போட்டு விளம்பரம் பண்றாங்க. அதுக்காகதான் உங்களிடம் மன்னிப்பு கேட்டேன்' என்றாராம் ரஜினி.
'உங்க படத்திலே நான் நடிச்சேன் என்பதே எனக்கு பெருமை. இதில் போஸ்டரில் என் படத்தை போடலே என்பது பெரிய விஷயமா? இதுக்குப் போயி நீங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசணுமா?' என்று நெகிழ்ந்து போனாராம் வடிவேலு.
போனை கீழே வைத்த கையோடு எல்லாரையும் அழைத்து ரஜினியின் இந்த உயர்ந்த பண்பை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார் வைகைப்புயல். 'படத்தோட கதை என்னன்னே சொல்லாம நான் சொன்னதை அப்படியே கேமிராவுக்கு முன்னால பேசு. இல்லைன்னா போ என்று சொல்கிற இந்த காலத்திலே இப்படியும் ஒரு மனுசன். அதனாலதான் அவரு இவ்வளவு தூரம் வளந்திருக்காரு' என்று போகிற போக்கில் வேறொரு இயக்குனருக்கும் குட்டு வைக்கிறார் வடிவேலு.
-ஆர்.எஸ் |