ஆணானப்பட்ட பாலசந்தரையே அதிரி புதிரியாக்கி விட்டார்கள் ஸெல்வனும், ஜீவனும். படம்-கிருஷ்ண லீலை! விக்னேஷ் நடித்த சூரி என்ற படத்தை எடுத்தவர் ஸெல்வன். அதன் பின் இவர் ஸெல்லும் இடமெல்லாம் 'நோ என்ட்ரி' போர்டுதான் கண்களில் பட்டது. ஆனாலும் தன் முயற்சியை சற்றும் விடாமல் முன்னணி ஹீரோக்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி இவர் கதையை கேட்டு ஓ,கே சொன்னவர்தான் ஜீவன். கவிதாலயா நிறுவனம், ஏற்கனவே இவருக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தது. இந்த நிலையில் தனக்கு கதை பிடித்திருந்ததால் ஸெல்வனை கவிதாலயாவுக்கு அனுப்பி வைத்தார் ஜீவன்.
கம்பெனிக்கும் கதை பிடித்துப் போக, விறுவிறுவென்று படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். ஒருநாள் படப்பிடிப்பில் ஜீவனுக்கு சீன் சொன்ன ஸெல்வன், இப்படி வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு விஷயத்தை சொல்ல, இப்படியிருக்கலாமே என்று ஜீவன் வேறு மாதிரி எடுத்துக் கொடுக்க, அவ்வளவுதான்... ஈகோ தலைதூக்கிக் கொண்டது இருவருக்கும் இடையே!
நான் சொன்ன மாதிரி எடுக்கவில்லையென்றால், நான் நடிப்பதாக இல்லை என்று ஜீவன் கூற, நீங்க சொல்ற மாதிரி எடுக்கணும்னா அதுக்கு நான் தயாராக இல்லை என்று ஸெல்வன் எகிற, கொஞ்ச நேரம் படப்பிடிப்பு நின்று போய்விட்டதாம். ஒரு நாள் படப்பிடிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் நிறுவனம், பதறிப் போனது. பிறகு பாலசந்தரே தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்தாராம்.
சிகரத்தின் உச்சியிலேயே கரகம் ஆடியிருக்காங்களே, அடக்கடவுளே...!
-ஆர்.எஸ். |