அதிகமாக பேசுகிறவர்களை அகராதி பிடித்தவன் என்பார்கள். எந்த வார்த்தைக்காவது அர்த்தம் புரியவில்லை என்றால், அதை தெரிந்து கொள்ள தேடுவதும் அகராதிதான். இப்படி தலைகணமும் அகராதி, இலக்கணமும் அகராதி என்ற கோணத்தை எடுத்துக் கொண்டு கதை சொல்ல வந்திருக்கிறார் நாகா வெங்கடேஷ். படத்தின் பெயரும் அதேதான்.... அகராதி!
ராஜேஷ்குமாரின் இரவில் ஒரு வானவில் என்ற கதையைதான் படமாக்கி வருகிறார் நாகா. பணம் என்ற மாயப் பிசாசால், கலாச்சாரங்களும், உறவுகளும் சிதறிப்போவதை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம். தெரிந்த முகங்கள் என்று பார்த்தால், சிலந்தி மோனிகா, ஜெமினி கிரண், இவர்களுடன் முமைத்கானும் இருக்கிறார்.
முமைத்கானை வைத்துக்கொண்டு கிளாமர் ஆட்டம் வைக்காமல் இருந்தால், சமுதாயம் தூற்றாதா? ஜிகிடு ஜிகிடு பம்பம் என்ற பாடலுக்கு ஆடுகிறார் இவர். வாளமீன், கத்தாழ ஸ்டைலில் தமிழகத்தை கலக்கப் போகும் பாடல் இது என்கிறார் நாகா. மேலே சொன்ன இரண்டு பாடலுக்கும் இசையமைத்த சுந்த சி பாபுதான் இந்த படத்திற்கும் இசை.
படத்தில் இன்னொரு விசேஷம், 'அகரம்' என்ற படத்தில் மெல்லிய ஆடையில் அருவிக்குளியல் போடும் அர்ச்சனா, இப்படத்திலும் ஒரு குளியல் போட்டிருக்கிறார். ஸ்டில்களை பார்த்தால் நமக்கு ஜலதோஷம் பிடிக்கும் போலிருக்கிறது!
-ஆர்.எஸ்.
|