'இதுவரை எத்தனையோ நடிகர்களை வைத்து டைரக்ட் பண்ணியிருக்கேன். முதன்முதலா ஒரு மனிதனை வைத்து டைரக்ட் பண்றேன்' இப்படி ஒரு முன்னுரையுடன் தனது ராஜாதி ராஜா படம் பற்றி பேச துவங்குகிறார் ஷக்தி சிதம்பரம். இவர் மனிதன் என்று குறிப்பிட்டது ராகவா லாரன்சை!
அனாதை குழந்தைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டிவரும் லாரன்சின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தும் படமாகவும் இருக்குமாம் ராஜாதிராஜா. இந்த படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு 'இது ரஜினி நடித்த ராஜாதி ராஜாவின் ரீமேக்தானே?' என்கிறார்கள். பொல்லாதவன், படிக்காதவன் மாதிரி, இதுவும் புதிய கதைதான் என்றார் ஷக்தி சிதம்பரம்.
இவர் படங்களில் ஓயாமல் தலை காட்டும் (தலையை மட்டுமா?) நமீதா, இந்த படத்தில் இல்லை. விநியோகஸ்தர்களின் குபேர ஸ்தானத்தில் குடியிருக்கும் நமீதா இல்லாமல் ஒரு படமா? என்றால், 'அதான் அவருக்கு பதிலா ஆறு ஹீரோயின் இருக்காங்களே?' என்றார் ஷக்தி.
ஸ்னிக்தா, மீனாட்சி, மும்தாஜ், சமிக்ஷா, காம்னா, கிரண் என்ற ஆறு நடிகைகளும் வெவ்வேறு ஸ்டைலில் கவர்ச்சி காட்டியிருப்பதுதான் விசேஷம். ஆறு ஹீரோயின்களுக்கும் ஆறு பாடல்கள்! அதிலேயே பாதி படம் முடிந்துவிடும். பிறகு கதையை எப்போ சொல்வீங்க என்றால், டைட்டில் போட்டவுடனேயே கதை ஆரம்பித்துவிடுமே, பிறகெதுக்கு இப்படி ஒரு கேள்வி என்கிறார் ஷக்தி சிதம்பரம். சதுரங்க ஆட்டத்தில் மற்றவர்கள்தான் ராஜாவுக்கு செக் வைப்பார்கள். ஆனால் இந்த ராஜாவுக்கு யாரும் செக் வைக்க முடியாது. மாறாக இவர்தான் மற்றவர்களுக்கு செக் வைப்பார். ஏன்? எப்படி? வெள்ளித்திரையில் காண்க என்று இரண்டு வரியில் கதையை பற்றி லீட் கொடுத்த ஷக்தி சிதம்பரம், இந்த முறை வடிவேலு, விவேக் வகையறாக்களை விட்டு விட்டு கருணாசை நம்பியிருக்கிறார்.
அண்ணன் வச்ச நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். கடுமையாக உழைப்பேன் என்கிறார் கருணாசும். முதன் முதலாக இப்படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனிலும் இருக்கிறார் கருணாஸ்.
-ஆர்.எஸ்.அந்தணன் |