சிபிராஜுக்கு கால்கட்டு போட்டாகிவிட்டது. சிறு வயது ஹீரோக்களில் சிபிராஜ்தான் சின்னவராக இருப்பார்! இவரும் இல்லற வாழ்க்கையில் நுழைந்ததால், கோலிவுட்டில் பேச்சுலர்களின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று மைனஸ்.
கடந்த எட்டு வருடமாக ரேவதி என்ற பெண்ணை காதலித்து வந்த மகனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் சத்யராஜ். மகனிடம் நண்பனை போலவே பழகிவருகிற சத்யராஜ், இந்த திருமண அறிவிப்பிலும் தனது பிரண்ட்ஷிப் ஸ்டைலை விடவில்லை. வழக்கம்போல சிபியை வம்புக்கிழுத்து கலகலப்பாக்கினார். "எட்டு வருசமா லவ் பண்றாராமாம்? இன்னும் நாலு வருசம் விட்டால், மரோசரித்திரா காதலாகியிருக்கும்" என்று கிண்டலடித்தவர், பகுத்தறிவு குடும்பமான தனக்கு ஜாதி மேல் நம்பிக்கை இல்லை என்றார். ஆனாலும் சர்டிபிகேட்ல ஒரு ஜாதி போட்டிருக்குமல்லவா? அவங்க முதலியார் என்றவர், இந்த திருமணத்தை முழுக்க முழுக்க பெண் வீட்டார் விரும்பியபடி நடத்தவும் அனுமதித்திருக்கிறார்.
ரேவதியிடம் காதல் வயப்பட்டது எப்படி? வெட்கம் வழிய பேசினார் சிபி. "எங்க உறவுக்கார பெண் மகிதாவோட பிரண்டுதான் ரேவதி. மகிதாவோடு அப்பப்போ வீட்டுக்கு வருவாங்க. அப்படி ஆரம்பிச்ச பழக்கம் காதலாகிடுச்சு. இப்போதான் எங்க காதலை வீட்டில் சொன்னேன். இரண்டு வீட்டிலேயும் சம்மதிச்சாங்க. இத்தனை வருசமா என்னை பற்றி எந்த கிசுகிசுவும் வந்தததில்லை. அதனால் அவங்க இது சம்பந்தமாக என்னிடம் பேசியதும் இல்லை" என்றார் சிபி.
செப்டம்பர் 14-ந் தேதி அக்கார்ட் ஹோட்டலில் திருமணம் நடைபெறவிருக்கிறது. மறுநாள் ரிசப்ஷன். கலையுலகம், அரசியல் உலகம் இரண்டிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் சத்யராஜ். மணமக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
-ஆர்.எஸ்.அந்தணன் |