பழைய பட டைட்டில்களை சுட்டு தனது படங்களுக்கு வைப்பவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்து அந்த 'கெட்ட' பழக்கத்திற்கு ஒரு குட்டு வைத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம். உடனே பழைய புத்தங்களின் தலைப்பை சுட ஆரம்பித்து விட்டார்கள் போலும்.
நெப்போலியன் நடிக்கும் பள்ளிகொண்டபுரம் டைட்டில், நீல பத்மநாபன் எழுதிய புகழ்பெற்ற நாவலின் தலைப்பு. எம்.பில், பி.எச்.டி மாணவர்கள் ஆய்வுப்படிப்புக்காக இந்த நாவலை தேர்வு செய்து பட்டங்களும் வாங்கியிருக்கிறார்கள். தமிழ் பதிப்பை தொடர்ந்து இந்தி, மலையாளம், உர்து, பஞ்சாபி, மாராட்டி, குஜராத்தி, ஆஸாமீஸ், தெலுங்கு, ஒரியா, கன்னடம், வங்கம் ஆகிய மொழிகளிலும் இந்த நாவலை மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் பெருமை கொண்ட நாவலின் தலைப்பை ஒரு சினிமாவுக்கு, அதுவும் நாவலாசிரியரின் சம்மதம் இல்லாமலே வைத்திருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. நாலாசிரியருக்கு ஆதரவாக திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் குரல் கொடுத்திருக்கிறது. உடனடியாக பெயரை மாற்ற வேண்டும் என்று நீல.பத்மநாபனும் முறையிட்டிருக்கிறார்.
இத்தனை களேபரங்களுக்கு பிறகு மாற்றிவிடுவதுதானே புத்திசாலித்தனம்!
-ஆர்.எஸ்.அந்தணன் |