நடிகைகளில் முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கி சாதனை படைத்தவர் கே.பி.சுந்தரம்பாள்! அவரைப் போலவே முதன் முதலாக ஓரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி சக ஹீரோயின்களை மூச்சடைக்க வைத்திருக்கிறார் நயன்தாரா.
லிங்குசாமி இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டதாம். நடிப்பதாக ஒப்புக் கொண்ட நயன், கேட்ட சம்பளம் கிறுகிறுக்க வைக்கிறது. ஒன்றரை கோடி! இந்த சம்பளம் நயனுக்கு புதிதல்ல. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானா ஒரு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்ட நயன், இலியானாவின் சம்பளத்தை முறியடிக்கும் விதமாக ஒன்றரை கோடி வாங்கியிருக்கிறார். அதே சம்பளத்தைதான் தமிழிலும் கேட்டிருக்கிறார்.
ஆனால், சிறிதும் தயக்கம் காட்டாமல் அவர் கேட்ட சம்பளத்தை தருவதாக ஒப்புக் கொண்டாராம் லிங்குசாமி. இந்தப்படம் துவங்கும் முன்பாகவே கதை சரியில்லை என்று கார்த்தி விலகிக் கொண்டதாக ஒரு கிசுகிசு பரவியது. அதன்பின் கார்த்தியை திருப்திப்படுத்தும் விதமாக கதையை சரி செய்தாராம் லிங்கு.
எது எப்படியோ? இந்தியாவின் பண வீக்கம் ஏழைகளை இளைக்க வைத்த மாதிரி, நயன்தாராவின் சம்பள வீக்கம் சக நடிகைகளை மேலும் இளைக்க வைத்திருக்கிறது.
-ஆர்.எஸ். |