நடிகைகளின் ஜிகினா சிரிப்பு, ஹீரோக்களின் ஆட்டோகிராப் அலட்டல் எதுவும் இல்லாமல் ஒரு ஆடியோ விழா! திரும்புகிற இடமெல்லாம் குழந்தைகள். அவர்களின் காச்மூச் கொண்டாட்டங்கள் என்று வண்ணத்துப்பூச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, முற்றிலும் பரவசத்தை கொடுத்தது.
உதிரிப்பூக்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, இயக்குனர் அமீர், நக்கீரன் கோபால், லேனா தமிழ்வாணன், நடிகை ரேவதி ஆகியோர் மேடையை அலங்கரித்திருந்தார்கள். இவர்களுக்கு சிறுவர், சிறுமிகள் கையாலேயே நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சினிமா எடுப்பதை விட, அதை மார்க்கெட்டிங் செய்வதில் இருக்கிற சிரமங்களை பற்றி வெளிப்படையாக பேசினார் அமீர். இப்போதெல்லாம் பட போஸ்டரில் கத்தியை வைத்துக் கொண்டு ஹீரோ கோபமாக நின்றால்தான் தியேட்டர் உள்ளேயே வருகிறான் ரசிகன். அதுமட்டுமல்ல, அதுபோன்ற படங்களை வாங்கதான் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயாராக இருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சி போன்ற சிறு படங்களை, வாங்கவே ஆள் இருக்காது. தியேட்டர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். இப்போது தசாவதாரம் ஓடும் தியேட்டர்களில் இருந்து அப்படத்தை எடுத்தால்தான் புதிய படங்களை வெளியிட முடியும் என்ற சூழல் இருக்கிறது. தசாவதாரம் போனால், பின்னாலேயே குசேலன் வரும். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தை எப்படி ரிலீஸ் செய்வார் அழகப்பன்?
இவரது முயற்சிக்கு பலரும் ஆதரவு கொடுக்க வேண்டும். முக்கியமாக குசேலன் படத்தை 65 கோடிக்கு வாங்கிய சாய்மீரா நிறுவனம், இப்படத்தை ஒரு கோடி ரூபாய்க்காவது வாங்கி தனது தியேட்டர்களில் திரையிட வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் என்றார் அமீர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையில்.
உதிரிப்பூக்கள் மகேந்திரன் பேசும்போது, 'தமிழ்சினிமாவில் டூயட் என்ற அருவருப்பான சிந்தனையை ஒழிக்க வேண்டும். நல்ல படங்களை கொடுக்கிற இயக்குனர்கள் கூட அந்த தவறை செய்கிறார்கள், இனிமேலாவது டூயட் இல்லாமல் படம் எடுங்கள்' என்றார்.
'குழந்தைகள் மீது தனது எண்ணங்களை திணிக்கிறார்கள் பெற்றோர்கள். 12 வயது வரைக்குமாவது அவர்களை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்' என்றார். இப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார் ரேவதி.
-ஆர்.எஸ்.அந்தணன் |