ஒருவழியாக ரோபோ படத்திற்கு கதாநாயகி கிடைத்துவிட்டார். தீபீகா படுகோன், அல்லது ஐஸ்வர்யாராய் என்று பயணப்பட்ட தேடுதல் படலம், ஐஸ்வர்யாராய் சம்மதித்ததால் முடிவுக்கு வந்திருக்கிறது. சிவாஜி படத்திலேயே ஐஸ்வர்யாராய் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினார் ரஜினி. அப்போது பல்வேறு காரணங்களால் அந்த அழைப்பை நிராகரித்தார் ஐஸ். ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் நடித்திருந்ததால், உலக அழகியை சகஜமாக அணுக முடிந்த ஷங்கருக்கு, சம்பளம் பேசுவதும் பெரிய விஷயமாக படவில்லை. சுமார் 1 கோடியே 50 லட்சம் சம்பளம் தருவதாக முடிவாகியிருக்கிறதாம். ரஜினியுடன் ஜோடியாக நடித்த எந்த நடிகையும் இவ்வளவு சம்பளம் இதற்கு முன் வாங்கியதில்லை. சிவாஜியில் நடித்த ஸ்ரேயாவுக்கு கூட 30 லட்சம் மட்டுமே சம்பளம் பேசப்பட்டதாம். ரோபோவுக்காக ஜுலையில் இருந்து தன்னுடைய தேதிகளை யாருக்கும் தராமல் வைத்திருந்த த்ரிஷா கடைசிவரை ஷங்கரிடமிருந்து அழைப்பு வரவில்லை என்பதாலேயே அந்த தேதிகளை சர்வம் படத்திற்கு கொடுத்திருக்கிறார். இதில் அதிக ஏமாற்றம் ஸ்ரேயாவுக்குதான். “மறுபடியும் ரஜினி சாருடன் நடிக்க அழைத்தால் அது என் பாக்யம்” என்று வெளிப்படையாக பேசியும், கைநழுவி போய்விட்டது வாய்ப்பு. ஆனால், ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கிடைத்ததால் ரோபோ குழுவினருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஏனென்றால், இத்தனை கோடி செலவு செய்கிற படத்திற்கு வெறும் தமிழ், தெலுங்கு, கலெக்ஷன்கள் போதாது. ஹிந்தி மார்க்கெட்டையும் பிடித்தாக வேண்டும். அதற்காக கெஸ்ட் ரோலில் அமிதாப்பை நடிக்க வைக்கலாம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஐஸ்வர்யா என்ற அழகான கல் இந்தியாவில் உள்ள அத்தனை மொழி மாங்காய்களையும் விழ வைத்திருக்கிறது.
-ஆர்.எஸ். |