'கோடம்பாக்கத்தில் ஒரு கோல்ட் ஹவுஸ்' என்றே விளம்பரப்படுத்தலாம். அங்கமே தங்கமாக இருக்கிற மேகா ராஜ் என்ற பனிப்புயலை கோலிவுட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார் புதிய தயாரிப்பாளர் லேகா ரத்னகுமார்.
சின்னத்திரையில் ஏழு தொடர்கள், சினிமா அல்லாத நூற்றுக்கணக்கான விளம்பர படங்கள் என்று அனுபவப் பாடத்தை அட்சர சுத்தமாக கற்றிருக்கும் இவர், முதன் முதலாக ஒரு முழு நீளப்படத்தை எடுக்கவிருக்கிறார். இதற்காக மும்பை மோகினிகளுக்கு வலை வீசியபோது கிடைத்த தங்கப் புதையல்தான் இந்த மேகாராஜ்.
கோல்கேட் விளம்பரத்தில் ஐஸ்வர்யாராயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறாராம் இவர். அதுமட்டுமல்ல, சச்சின் டென்டுல்க ர், அனுபம்கெர் ஆகியோருடன் நடித்த அனுபவமும் உண்டு. பஜாஜ் பல்ப், பார்லே சாக்லெட் என்று வரிசையாக லிஸ்ட் போட்டால், மேகாராஜ் நடித்த விளம்பர படங்கள் மட்டும் நூறை தாண்டும். மும்பையில் பி.காம் படித்து வரும் இந்த மாடர்ன் மைனாவுக்கு பரதநாட்டியமும் அத்துப்படி என்பது கூடுதல் தகவல்.
பொதுவாக தனது படத்தில் அறிமுகம் ஆகும் ஹீரோயின்கள் அப்படம் ரிலீஸ் ஆகும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போடுபவர்களே அதிகம். அவர்களுக்கு மத்தியில், இதைவிட நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம். தவறில்லை என்று சுதந்திரமும் கொடுத்திருக்கிறாராம் லேகா ரத்னகுமார். கதையை இவரது மனைவி லேகா எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிற பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் இந்த இளம் தயாரிப்பாளர்.
கதை சென்னையில் துவங்கி, ஆஸ்திரேலியா, யு.எஸ்.ஏ என்று சுற்றி மீண்டும் சென்னையில் முடிகிறதாம். சீக்கிரம் படத்தின் பெயரையும், ஹீரோ யார் என்பதையும் அறிவிப்போம். அதுவரை வெயிட் என்கிறார் லேகா ரத்னகுமார்.
முன்னாள் உலக அழகி பிரியங்கா மாதிரியே இருக்கிறதா பிரண்ட்ஸ் சொல்றாங்க. அப்பிடியா இருக்கேன்? என்கிறார் மேகா. ஆஹா....!
-ஆர்.எஸ்,அந்தணன் |