| ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் பிரேம்ஜியின் டூயட் ஒன்றை காணும் பெரும் பாக்கியம் நமக்கு கிடைத்தது. படம் தோழா. கொஞ்சம் சீரியசாகவே அவர் ஆடினாலும், காமெடியன் ஆடினால் கலகலப்பே மிச்சம்! மேற்படி பாடலை அவரே எழுதி இசையமைத்திருக்கிறார் என்பது இன்னொரு விசேஷம். (டி.ராஜேந்தர்?) ஐயய்யோ, உதவிக்கு அப்பாவை வச்சுகிட்டேன் என்கிறார் பிரேம்ஜி. நடிப்பதற்கு நிறைய அழைப்புகள் வருது. ஆனால், நான்தான் விரும்புவதில்லை என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தாலும், பல படங்களில் நடித்து வருகிறார் பிரேம்ஜி. தோழாவை பொருத்தவரை என்னுடைய சென்னை 28 டீம் அப்படியே இதிலும் இருப்பதால், அரட்டை அடிப்பதற்காக நானும் சேர்ந்து கொண்டேன். நிறைய அரட்டை, அப்பப்போ நடிப்பு என்று போனது ஷ§ட்டிங். சொல்லும்போதே அருகில் இருக்கிற மற்ற நண்பர்களை பார்த்து ஒரு குபீர் சிரிப்பு சிரித்தார். படத்தில் இடம் பெற்ற பிற பாடல்களை விட, பிரேம்ஜி ஆடுகிற அந்த பாடலில் கொஞ்சம் விசேஷம் தெரிகிறதே என்றால், ஏம்ப்பா கூட்டணிக்கு குண்டு வைக்கிறீங்க என்கிறார் சீரியஸ் முகத்துடன்.
சொந்த பந்தங்களை விட நட்புதான் சிறந்தது என்பதை சொல்லுகிற படமாம். படத்தின் கதை எப்படியோ, படத் தயாரிப்பாளர்களின் கதையும் இதுதான். நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். படத்தின் இயக்குனர் சுந்தரேஸ்வரன் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். யூகிக்கவே முடியாத திரைக்கதை அமைச்சிருக்கேன் என்கிறார். ரீமிக்ஸ் பூதத்திடம் பிரேம்ஜி மட்டும் தப்பிக்க முடியுமா என்ன? இந்த படத்தில் “ஒரு நாயகன், உதயமாகிறான்” என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். நிதின் சத்யா, வசந்த் அண்கோ விஜய், அஜய், பிரேம்ஜி ஆகிய நால்வரும் கோட் சூட் போட்டுக் கொண்டு ஆடுகிறார்கள். இரைச்சலுக்கு நடுவே மிரட்டும் குளோஸ்-அப்புகள் இளசுகளை கவரலாம்.
-ஆர்.எஸ்.அந்தணன் |