| கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ போலாகிவிட்டது ஏ.வி.எம் நிறுவனம். இன்டர்நெட்டா.. அப்படின்னா? இந்த போர்ட்டபிள் டி.வி முன்னாடி உட்கார்ந்து டைப் அடிப்பாங்களே, அதுவா? என்று கேட்டதெல்லாம் பழங்காலம். இப்போது “எல்லாரும் வாங்க” என்று முகங்கொள்ளாத சிரிப்போடு அழைக்கிறது அதே நிறுவனம். ஒரு சின்ன பிளாஷ் பேக்! சிவாஜி படத்தின் எந்த ஒரு செய்தியையும் இன்டர்நெட்டுகளுக்கு வழங்க கூடாது என்று கட்டளை பிறப்பித்தது அந்த நிறுவனம். அதுமட்டுமல்லாமல் அனுமதியில்லாமல் புகைப்படங்களை போடுவதாகவும் போலீசில் புகார் செய்தது. பத்திரிகையாளர் காட்சிக்கு எந்த இணையதள நிருபர்களுக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும், விடாமல் துரத்தி துரத்தி படம் பார்த்த நிருபர்கள் விமர்சனங்கள் எழுதினார்கள். சிவாஜி படத்தின் வெள்ளி விழாவின்போதும் இவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. வெட்கத்தை விட்டு அழைப்பிதழ் கேட்டவர்களிடம், “எங்களுக்கு விருப்பம் இல்லை. நீங்கள் வரவேண்டாம்” என்று அந்நிறுவனம் சார்பாக பதில் கூறப்பட்டது. ரஜினி என்ற ஒரு துருப்பு சீட்டு படுத்துகிற வேலை இது என்பதை புரிந்து கொண்ட நிருபர்களும் அமைதியாக இருந்துவிட்டார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் ரஜினி கால்ஷீட் கொடுப்பாரா என்ன? ராக்கெட்டாக இருந்தாலும் எரிபொருள் தீர்ந்தால் விழுந்துதானே ஆகவேண்டும்?
தற்போது அயன் என்ற படத்தை எடுத்துவரும் இந்நிறுவனம் எல்லா இணையதள நிருபர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறது. அயன் படத்தை அனுமதியின்றி போட்டாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரை, “அப்படியாவது புரமோட் பண்ணுங்கப்பா...!”
-ஆர்.எஸ். |