| எப்.எம் விரும்பிகளுக்கு தெரிந்திருக்கும் எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் நிறுவனத்தை. எப்.எம் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் மனதிற்கினிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிறுவனம் இது. சினேகத்தோடும் சிரித்த முகத்தோடும் ஒரு ரிசப்ஷனிஸ்ட் போல நம் காதுகளோடு பழகிய இந்த நிறுவனம், புற்றீசல்கள் போல எப்.எம் கள் பெருத்திருக்கும் இந்த நேரத்தில் மேற்படி தொழிலில் இருந்து விலகிவிட்டது. ஆனாலும், புது புது யுக்திகளை புகுத்துவதில் கை தேர்ந்த நிறுவனம் ஆயிற்றே. சும்மாயிருக்க முடியுமா? சிக்னலில் பொறுத்தப்பட்டிருக்கும் டிஜிட்டல் எண் போர்டுகள் இவர்கள் ஐடியாதான். நமக்கு சிக்னல் விழுகிற வரை இன்ஜினை முறுக்கி கொண்டிருக்க தேவையில்லை. ஆப் செய்துவிட்டு பிறகு ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். பஸ் ஸ்டாப்பில் ஹோர்டிங்குகள், சாலையின் இருபுறத்தையும் பிரிக்கும் சென்ட்டர் மீடியன்களில் விளம்பர போர்டுகள் என்று புது புது யுக்தியை அறிமுகப்படுத்தி விளம்பர உலகில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டார்கள்.
இதற்கிடையில் இன்னொரு புரட்சியாக, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் வெளிப்பகுதியில் வோடாபோன் விளம்பத்தை பிரிண்ட் செய்து, ரயில்வே துறையில் இன்னொரு புதுமையை படைத்திருக்கிறார்கள். இதற்காக பெருந்தொகை ஒன்றை ரயில்வே நிர்வாகத்திற்கு போகவும் வழி ஏற்படுத்தியிருக்கிறார்கள். (இப்போது புரிகிறதா, லல்லு ரயில்வே டிக்கெட் ரேட்டை குறைத்ததன் ரகசியம்?) அழகான தோற்றத்தோடும், கம்பீரத்தோடும் இந்த விளம்பர ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைவதை பார்த்தால், சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பார்கள். தினமும் 27 லட்சம் பேர் இந்த ரயிலை பார்ப்பதாக சொல்கிறது புள்ளி விபரம் ஒன்று. இப்படி ஐடியா கொடுப்பது பெரிய விஷயம் இல்லை. அதை செயல்படுத்துவதில்தான் சிக்கலே என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குனர் டி.முரளிதரன். முன்பெல்லாம் இடையில் ஒரு பெட்டியை கழற்றிவிட்டு வேறு பெட்டியை மாட்டிக் கொள்ளலாம். ஆனால், இந்த விளம்பரத்தை எழுதி விட்டால் அவ்வாறு செய்ய முடியாது. எனவே ஒரு வருடத்திற்கு 17 பெட்டிகளில் ஒரு பெட்டியை கூட மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுத்து அதற்கு சம்மதமும் பெற்றோம் என்கிறார். இந்த ரயிலை தினமும் குளிப்பாட்டுவதற்காகவே 100 பேருக்கு மேல் நியமித்துள்ளோம் என்கிறார் முரளிதரன். தனது அசாத்திய விளம்பர ஐடியாவை சினிமாவுக்குள்ளும் புகுத்த போகிறாராம். என்னவென்று விரைவில் சொல்கிறேன் என்கிறார் சின்ன சஸ்பென்சோடு.
-ஆர்.எஸ்.அந்தணன் |