| விஜயகாந்த், சரத் பட விழாக்கள் அரசியல் மாநாடுகள் போல ஆரவாரத்தை கிளப்பி வருகின்றன. கரை வேட்டி பிரமுகர்கள், கைதட்டல்கள் என்று சினிமா மேடைகளுக்கு புது அர்த்தம் கற்பிக்கிறார்கள் இருவரும். சினிமா வேறு, அரசியல் வேறு என்று கொள்கை வைத்திருந்தாலும் மேற்படி ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கவே முடிவதில்லை அவர்களால். அரசாங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட கரை வேட்டி பிரபலங்கள் குவிந்திருக்க, விஜகாந்த்தை வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களும் நிறைந்திருந்தார்கள். கேப்டன் என்று உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர வைத்தார்கள் தொண்டர்கள். இந்த படத்தில் தீவிரவாதிகளை விரட்டுகிற வேலையெல்லாம் இல்லை. இது போலீஸ் கதை. போலீஸ் அரசாங்கத்தின் கீழ் செயல்படுகிற முக்கியமான துறைதானே. அதனால்தான் அரசாங்கம் என்று டைட்டில் வச்சுட்டோம். எப்படி இந்த டைட்டிலை வைக்கலாம் என்று பல பேர் பலவிதமா குற்றம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கே இப்படின்னா உள்ளாட்சின்னு இன்னொரு டைட்டிலை ரிஜிஸ்டர் பண்ணி வெச்சுருக்கேன். அதுக்கு என்ன சொல்வாங்களோ என்று அரசியல் டச் கொடுத்து விழாவை கலகலப்பாக்கினார் விஜயகாந்த். படத்தின் இயக்குனர் மாதேஷ், இப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகரை பார்க்கவே முடியாது என்று புகழ்ந்து, அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் சொன்னார். கனடாவிற்கு படப்பிடிப்புக்கு போயிருந்தார்களாம். அங்கே திடீரென்று விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு. நீங்கள் வேண்டுமானால் சென்னைக்கு திரும்பிவிட்டு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள். அதுவரைக்கும் கனடாவில் யூனிட்டோடு காத்திருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சுதீஷ§ம், இயக்குனர் மாதேஷ§ம் சொல்ல, இல்லையில்லை. படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்ற விஜயகாந்த் பெரும் சிரமத்தோடு நடித்து கொடுத்தாராம். தன்னை தேடி நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் அரசியலில் இருப்பதால் நடிக்க நேரம் இல்லையென்று கூறிய விஜயகாந்த், தற்போதுகூட 15-ந் தேதி எங்கள் ஆசான் படத்திற்கு டேட்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் விவாதம் வந்துவிட்டதால் படப்பிடிப்பு கேன்சல் ஆகிவிட்டது. என்னை கமிட் பண்ணிவிட்டு தயாரிப்பாளர்கள் சிரமப்படக் கூடாது என்பதால்தான் ரொம்ப செலக்ட் பண்ணி படங்களை ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கு என்றார். இது விஜயகாந்தின் 150 வது படமாம். சினிமா என்ற அரசியலில் பல இடர்களை முறியடித்து இத்தனை படங்களில் நடித்ததே பெரிய சாதனைதான்.
-ஆர்.எஸ்.அந்தணன் |