| குஷி குமாராக இருக்கிறார் ரிஷிக்குமார். அறிமுக நாயகன்தான் என்றாலும், முதல் படத்திலேயே இரண்டு ஜோடி. இரண்டு கெட்டப்! சந்தோஷத்திற்கு கேட்க வேண்டுமா என்ன? இயக்கம் படத்தில் நடிக்கும் இவர், நடிப்பதற்கு முன் கிரிகெட் பிளேயராக இருந்திருக்கிறார். கொஞ்சம் அழகாக இருந்தாலே நடிக்க போயேன் என்று உசுப்பி விடுவார்கள் நண்பர்கள். இவர் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்! வண்டியை ஸ்டார்ட் பண்ணி கோடம்பாக்கத்தை நோக்கி தள்ளியே விட்டுவிட்டார்கள்!
பவுடர் போட வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டாமா? கூத்துப்பட்டறையில் நடிப்பு. டான்ஸ், பைட் என்று கற்றுக் கொண்டாராம். போலார் ஃபேன், கோ ஆப்டெக்ஸ், கோடாக் பிலிம் என்று விளம்பர படங்களில் நடித்த அனுபவத்தால் கேமிரா பயம் கொஞ்சம் கூட இல்லாதது ரிஷிக்குமாரின் ப்ளஸ்களில் ஒன்று.
இயக்கம் படத்தில் கலெக்டராக நடித்திருக்கும் இவருக்கு சுஜிபாலா, ஸ்ருதிராஜ் என்று இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவரோடு கட்டாயம் டூயட் இருக்கிறது என்கிறார் சிரித்துக் கொண்டே.
படிப்பில் பி.பி.ஏ. நடிப்பில் இப்போதுதான் எல்.கே.ஜி என்று அடக்கமாக பேசினாலும், அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். விக்ரம் மாதிரி ஜெயிக்கணும் சார் என்கிற ரிஷிக்குமார், அதில் ஆக்ஷன் படங்களாக தேர்வு செய்யும் முடிவில் இருக்கிறார். அப்பதானே முன் வரிசை ரசிகர்கள் ஓ போடுவார்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.
-ஆர்.எஸ். |