| எல்.ஐ.சி மாடியிலிருந்து இறங்கி வந்திருக்கிறது வேதாளம். கவர்ச்சியாக நடிக்கிறார் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காக அமீரின் தாடியை பிடித்து இழுக்காத குறையாக சண்டைக்கு நின்ற ப்ரியாமணி, “அவர் நடிக்க அழைத்தால் போவேன்” என்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே? ஆனால் அந்த ஆச்சர்யத்திற்கு பின்னால் இருக்கிற கால்குலேஷன் இருக்கிறதே, அதற்கு பெயர்தான் கில்லாடித்தனம்.
டைரக்டர் அமீர் கூறிய சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ப்ரியாமணி. இதையடுத்து மேலும் சில குற்றச்சாட்டுகளை அவர் வைக்க, இரண்டு பேருக்கும் நடுவில் ஒரு யுத்தமே நடந்தது. இதையெல்லாம் ரப்பர் போட்டு அழித்துவிடுகிற மாதிரி தனது விருப்பத்தை கூறியிருக்கிறார் ப்ரியாமணி. நாளைக்கே அவர் தனது படத்தில் நடிக்க அழைத்தால் நான் போவேன். அவர் சொன்ன விஷயங்களுக்கு நான் பதில் சொன்னேன். அவ்வளவுதான். மற்றபடி அவர் எனக்கு எதிரியல்ல என்கிறார் ப்ரியாமணி. விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகிய நாலு பெரிய ஹீரோக்களுடன் நடித்தால்தான் பெரிய நடிகை என்று கொண்டாடுகிறார்கள். அதனால், என்னுடைய லட்சியம் இவர்கள் நால்வருடனும் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் என்கிற ப்ரியா, அதற்காக தனது முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
விக்ரம் நடிக்கும் படத்தை விரைவில் இயக்கவிருக்கிறார் அமீர். இந்த நிலையில் அமீர் அழைத்தால் நடிப்பேன் என்று ப்ரியாமணி சொல்வதற்கு காரணம் என்ன என்று இப்போதாவது புரிகிறதா?
-ஆர்.எஸ். |