| பழைய டைட்டில்களை பைசா செலவில்லாமல் லபக்கி கொள்ளும் இயக்குனர்களுக்கு இறுக்கி ஒரு கிடுக்கிப்பிடி போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இனிமேல் பழைய படங்களின் டைட்டில்களை பயன்படுத்தும் இயக்குனர்கள், அல்லது தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட டைட்டிலை வைத்திருப்பவர்களிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும். ஒருவேளை அவர்கள் மறைந்து போயிருந்தால் சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகளிடம் கடிதம் வாங்கி வரவேண்டும். இந்த கெடுபிடிகளுக்கு பிறகு முன்னணி நடிகர்களின் படப் பெயர்களை சுட்டுவிடும் இயக்குனர்கள் தங்கள் கையை சுட்டுக் கொண்டு தவித்துப் போயிருக்கிறார்கள். ஏன் இப்படி ஒரு கிடுக்கிப்பிடியை போட்டது சங்கம்? வேறொன்றுமில்லை. எம்.ஜி.ஆர், ரஜினி படங்களின் டைட்டில்களுக்கு ஏக கிராக்கி வந்து விட்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களுக்கோ, அல்லது வாரிசுகளுக்கோ ஒரு மரியாதை கிடைக்குமல்லவா? இதற்கிடையில் சிலர், தர்மசங்கடமான டைட்டில்களுக்கும் விண்ணப்பித்து வருகிறார்கள். அரசியல் தலைவர்கள், அல்லது அரசியலில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிரமுகர்கள் ஆகியோரின் பெயரையும் டைட்டிலாக பதிவு செய்கிறார்களாம். இதையும் எப்படி களைவது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறது சங்கம். அப்படியே அந்த ரீமிக்சுக்கும் ஒரு தடா போட்டால் சந்தோஷமாக இருக்கும். ஏதாவது வழி இருக்கிறதா பாருங்களேன் ஐயா...
-ஆர்.எஸ். |