மனசே மனுஷனா இருந்தா எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறார் அஜீத். கார்ப்பரேட் நிறுவனங்கள் அஜீத்தை வளைத்துப் போட கோடிகளை வைத்துக் கொண்டு நிற்க, ஆபத்தில் இருக்கிற தயாரிப்பாளர் ஒருவருக்கு கைகொடுத்திருக்கிறார்.
பீமா படத்தை ரிலீஸ் செய்ய முடியாத இக்கட்டில் இருக்கும் ஏ.எம்.ரத்தினம், முன்னணி நடிகர்கள் கால்ஷீட் இருந்தால் அதை வைத்து மீண்டும் எழுந்துவிடலாம் என்று தவித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களையெல்லாம் அணுகியபோதும் யாரும் செவி கொடுப்பதாக இல்லை. அஜீத்திடம் கேட்க முடியாத அளவுக்கு இருவருக்குமான நட்பு உடைந்து போயிருந்தது. காரணம்... ஒரு சின்ன பிளாஷ்பேக். சுமார் எட்டு வருடங்களுக்கு முன், பெப்சி அமைப்புக்கும், இயக்குனர்களுக்கும் பிரச்சனை வந்தபோது அஜீத் பெப்சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார். இது பிடிக்காத ரத்தினம், தன் படத்தில் நடிக்க அஜீத்திற்கு கொடுத்திருந்த அட்வான்சை அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று வற்புறுத்தினார். எங்கெங்கோ அலைந்து கடன் வாங்கி அட்வான்சை திருப்பிக் கொடுத்தார் அஜீத். அன்று வெளிப்படையாக இனிமேல் ரத்தினம் தயாரிக்கும் படங்களில் நடிப்பதில்லை என்று அறிவித்தார் அஜீத்.
காலம் சில நேரங்களில், நிலவரத்தை கலவரமாக்கும். அப்படியாகிவிட்ட ரத்தினத்திற்குதான் இப்படி கைகொடுத்திருக்கிறார் அஜீத். ஷங்கரும் இவரும் இணையவிருக்கும் புதிய படத்தை ரத்தினத்தின் சூர்யா மூவிஸ் பேனரில் தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக பீமா ரிலீஸ் ஆகிவிடும். ரத்தினமும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவார்.
அல்டிமேட்டானவர்தான் அஜீத்!
-ஆர்.எஸ்.அந்தணன். |