ராமேஸ்வரம் படம் பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார் திரைப்பட இயக்குனர் சீமான். இலங்கையிலிருந்து வரும் அகதி, இங்குள்ள பண்ணையார் பெண்ணை காதலிக்கிறார். இது ஏற்கும்படி இல்லை. இங்கு வரும் இலங்கை அகதிகள் ஒவ்வொரு நாளும் சொந்த நாட்டுக்கு திரும்பும் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களின் ஏக்கத்தையும் வலிகளையும்தான் படத்தில் காட்டவேண்டும். புலம் பெயர்ந்து வருபவர்கள் இங்கு காதலித்து கொண்டிருப்பதாக காட்டக்கூடாது. தணிக்கை குழுவை மீறி இலங்கை பிரச்னையை முழுமையாக சொல்ல முடியாது. அதனால் அத்தகைய படங்களை எடுக்காமல் இருப்பது நல்லது என்று அவர் கூறியிருக்கிறார்.
சீமானின் இந்த விமர்சனம் குறித்து ராமேஸ்வரம் படத்தின் இயக்குனர் செல்வத்திடம் கேட்டோம். காசி ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு ஈழத்தமிழர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டியிருக்கிறார்கள். இதுவரை என்னுடைய மெயிலுக்கு 4500 க்கும் மேற்பட்ட கடிதங்கள் பாராட்டி வந்திருக்கின்றன. கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட இந்த படம் பாராட்டுகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. ஈழத்தமிழர்கள் பற்றி தான் மட்டுமே பேச வேண்டும் என்று நினைக்கிறார் சீமான். மற்றவர்கள் பேசும்போது அதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இது போன்ற கருத்துக்களை அள்ளித்தெளிக்கிறார். அவர் ராமேஸ்வரம் படத்தை பார்த்துவிட்டு விமர்சித்திருந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை. தம்பி படத்தை பிரபாகரனுக்கு படைக்கிறேன் என்று இவர் கூறியதை விமர்சித்து இலங்கை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சீமான் முதலில் அதை படிக்கட்டும். பிறகு என் படத்தை பற்றி பேசட்டும் என்றார் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு!
-ஆர்.எஸ்.அந்தணன்.
|