பார்த்திபன் கனவுக்கு பிறகு சினேகாவை, தான் இயக்கும் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஆட்டோகிராபில் சேரனுக்கு தோழியாக வந்த சினேகா, இந்தப்படத்தில் ஜோடி. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ஜோடியாக நின்று வரவேற்றார்கள் இருவரும்.
விஜய், பிரபுதேவா, மாதவன், பார்த்திபன், ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், கலகலப்புக்கு பஞ்சமேயில்லை. சம்பிராதாய பேச்சுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், கலாட்டா காக்டெயிலாகவே இருந்தது பி.ச.ஆ.வெ.விழா!
இப்படத்தின் தயாரிப்பாளரான ராஜு மகாலிங்கமும் நானும் எல்.கே.ஜி யிலிருந்து பிரண்ட்ஸ். சேரன் சார் ஆந்திராவில் ரொம்ப பிரபலம். அவருடைய படங்கள் எப்பபோ வரும்னு அங்கே காத்திட்டு இருக்காங்க. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பார்த்திபன் முகத்தில் காயம் இருந்தது. என்னங்க என்று கேட்டேன். நேற்று ஒரு கனவு கண்டேன். என்னை நானே கீறிகிட்டேன் என்றார். மேடையிலே சினேகா இருக்காங்க என்று எதையோ பேசி பார்த்திபனை தூண்டிவிட்டு போனார் பிரபுதேவா. அவ்வளவுதான்... ஃபுல் மூடில் வந்தார் பார்த்திபன்.
சேர, சோழ, பாண்டியர்களில் சேரனுக்குதான் மச்சம். சோழனுக்கோ, பாண்டியனுக்கோ சினேகா ஜோடியாகலையே! சினேகாவோட உதட்டை பற்றி மட்டும் இரண்டு மணிநேரம் பேசலாம். பண்ட மாற்று முறை இப்போ இருந்திச்சுன்னா, கென்யா நாட்டுக்காரனிடமிருந்து ஆயுதங்களை வாங்கிட்டு சினேகாவோட சிரிப்பை கொடுத்திடலாம். ஏன்னா, ஆயுதங்களிலேயே பயங்கர ஆயுதம் சினேகாவின் சிரிப்புதான். ஆயதக்கடத்தலுக்காக சினேகாவை கைது செய்யலாம் என்றவர் டாப் டென் வரிசையில் சினேகாவை சேர்க்க முடியாது. ஏன்னா அவருதான் டாப்பா இருப்பார் என்றார். பக்கத்தில் நின்றிருந்த சினேகாவை பார்க்க வேண்டுமே! முகமெல்லாம் சிவந்து பரவச நிலைக்கே போயிருந்தார்.
தமிழ்ப்படங்கள் என்ற பெயரில் சென்னையில் எடுக்கிற பல படங்கள் தமிழ்ப்படங்கள் இல்லை. எந்த படத்தை பார்த்தாலும் இரண்டு மூன்று குரல்களைதான் திரும்ப கேட்க முடியுது. மொழி தெரியாமல் நடிப்பது இம்பாசிபிள். சினேகாவை சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்காங்க. பாராட்டுகள் என்றார் மாதவன்.
முக்கிய விருந்தாளியான விஜய், வழக்கத்தை மீறி கலகலப்பாகவே பேசியது ஆச்சர்யம். சேரன் ரொம்ப எதார்த்தமான நடிகர். இந்த படத்தின் டைட்டிலில் ஒரு ஃபீல் இருக்கு. ரொம்ப அழகான ஹீரோயின். அவங்க சிரிப்புக்கு தமிழ்நாடே அடிமை என்று சொல்ல, அன்று காலை நரி முகத்தில் விழித்திருப்பார் போலிருக்கிறது சினேகா.
இரண்டு பாடல்களை திரையிட்டார்கள். சினேகாவை பார்த்து ஸ்டேஜில் இருந்த ஒரு சில ஹீரோக்கள் மாதிரியே நாமும், அந்த பாடல்களை பார்த்து ஜொள் விட்டபடி அரங்கத்தை விட்டு வெளியேறினோம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
|